ஆந்திர மாநிலத்தில் குறைந்த வயதில் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக அவரது “நவரத்தினா” திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜெகனுக்கு கோயில் கட்ட, மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக கோபாலபுரம் மண்டலம், ராஜம்பாளையம் கிராமத்தில் ஓர் இடத்தை தேர்வு செய்தனர். அங்கு ஜெகனுக்கு கோயில் எழுப்ப நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில் கோபாலபுரம் தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தலைவர் வெங்கட் ராவ் கலந்துகொண்டு, கோயிலுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தார். இதுகுறித்து கோயில் பணி நிர்வாகிகள் கூறும்போது, பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஜெகன் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கொரோனா பிடியில் நாடு சிக்கியிருந்தாலும் ஆந்திராவில் வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.
இதனால் முதல்வருக்கு கோயில் கட்ட தீர்மானித்தோம். இங்கு அவரது சிலையை வைத்து தினசரி பூஜைகள் செய்வோம் என்றனர். எல்எல்ஏ தலைவர் வெங்கட் ராவ் கூறும்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்கிய அதேநாளில் இக்கோயில் பணிகளை தொடங்கி வைத்தது எனது அதிர்ஷ்டம் என்றார்.