அறிவியல் ஆரயிச்சி விஞ்ஞானிகள் நாஸ்கா பாலைவனத்தில் ஒரு மிகப்பெரும் பூனையின் 2,000 ஆண்டுகள் பழமையான அழகிய செதுக்கலைக் கண்டுபிடித்துள்ளனர். பெருவில் உள்ள நாஸ்கா பாலைவன பகுதியில் சூரியனின் ஒளியில் ஒரு பூனை அதன் காதுகள் மேலே விழிப்புடன் தூக்கி, வயிறு வெளிப்படையாகத் திறந்து, வால் நீட்டப்பட்டுப் படுத்திருக்கும் 120 அடி நீளமுள்ள ஒரு செதுக்கல் வடிவத்தை அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பூனை செதுக்கல் 37 மீட்டர் அதாவது 120 அடி நீளம் கொண்டது என்றும், இது சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது என்றும் அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது சமீபத்தில் பெருவில் உள்ள பிரபலமான நாஸ்கா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஜியோகிளிஃப் (Geoglyph) என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில்ஜியோகிளிஃப் என்றால் என்ன என்று பலருக்கும் ஒரு கேள்வி எழுந்திருக்கும், முதலில் இது என்ன என்று தெரிந்துகொள்ளுவோம்.
ஜியோகிளிஃப் என்பது ஒரு பெரிய வடிவமைப்பு ஆகும். பொதுவாக ஜியோகிளிஃப் என்பது நான்கு மீட்டருக்கு மேல் இருக்கும் சில உருவங்களின் செதுக்கல் ஆகும். பொதுவாக இந்த செதுக்கல்கள் கிளாஸ்டிக் பாறைகள் அல்லது கல், கல் துண்டுகள், சரளை அல்லது பூமி போன்ற நிலப்பரப்பின் நீடித்த கூறுகளால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோகிளிஃப் என்பது பாசிட்டிவ் ஜியோகிளிஃப் மற்றும் நெகட்டிவ் ஜியோகிளிஃப் என்று இரு வகையில் உள்ளது.
நாஸ்கா கோடுகள் நாஸ்கா பாலைவனத்தின் மண்ணில் மிகப்பெரிய வரைபடங்கள் ஆகும், இவை பெரும்பாலும் கி.மு 500 மற்றும் கி.பி 500 க்கு இடையில் நாஸ்கா கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்டவை. பாலைவனத்தின் சிவப்பு-பழுப்பு நிற கற்களுக்கு அடியில் மஞ்சள் சாம்பல் நிற மண் உள்ளது; மேல் அடுக்கு அகற்றப்படும் போது, இது அடியில் ஒரு இலகுவான நிறத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த பகுதியில் அதிக மழை, காற்று அல்லது மண் அரிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் அதிகம் நடப்பதில்லை, எனவே மனிதனால் உருவாக்கப்பட்ட மாபெரும் உருவங்கள் மற்றும் வடிவங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எந்தவித பெரிய சேதமும் இல்லாமல் நல்ல நிலையில் இருக்கிறது. முன்பு கண்டுபிடிக்கப்பட்ட வடிவங்களைப் போலவே, இப்பொழுது அறிவியல் விஞ்ஞானிகள் ஒரு பெரிய பூனையின் உருவத்தை பெரு நாட்டில் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் பெருவின் நாஸ்கா கோடுகளின் தலைமை தொல்பொருள் ஆய்வாளர் ஜானி இஸ்லா அவர்கள் ஸ்பானிஷ் செய்தி நிறுவனமான ஈ.எஃப்.இ இடம் “இந்த புதிய வடிவங்களை நாங்கள் இப்பொழுது கண்டுபிடித்தது என்பது மிகவும் வியக்கத்தக்கது, இந்த பாலைவனத்தில் இன்னும் பல உருவங்கள் அல்லது வடிவங்களை நாம் வரும் காலத்தில் கூட பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவ்ர் கூறியுள்ளார்.
மேலும் நாஸ்கா கோடுகள் சில வடிவியல் வடிவங்கள், சில எளிய கோடுகள், சில விலங்குகள் மற்றும் சில பொருள்களின் விரிவான சித்தரிப்புகளாக இணைக்கப்படுகின்றது. பெரும்பாலும் இவை பல மீட்டர் நீளத்திற்கு தரையில் நீட்டிக்கிடக்கின்றது, இதை தூரத்திலிருந்தோ அல்லது வானத்திலிருந்தோ பார்த்தால் மிகத்தெளிவாக தெரியும்.
இங்குள்ள மண்ணில் அதிக அளவு சுண்ணாம்பு கலந்து இருப்பதால், இது காலை நேர மூடுபனி ஈரப்பதத்தை உருஞ்சி கடினமாகியுள்ளது. இதனால் இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆழியாமல் இங்கு காணப்படுகிறது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட வகை பூனையின் ஜியோகிளிஃப் கி.மு 100-200 க்கு இடையில் தேதியிடப்பட்டுள்ளது.
அதாவது இது பராக்காஸ் காலத்தின் பிற்பகுதியாகும். இந்த பூனை கி.மு 100 இல் தொடங்கிய நாஸ்கா கலாச்சாரத்தை உருவாக்கிய பழைய பராக்காஸ் கலாச்சாரம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுவதாக அறிவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் இது இப்பகுதியில் காணப்படும் மற்ற ஜியோகிளிஃப்களை விட, இப்பொழுது கடுபிடிக்கப்பட்ட இந்த பூனையின் வடிவம் மிகப்பழமையாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை பெரிய சின்னங்கள் ஏன் பாலைவனத்தில் பதிக்கப்பட்டன என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் எங்களுக்கு சில தடயங்களைக் கொடுத்துள்ளன, இவை பயணக் குறிப்பான்களாக பயன்பாட்டு இருக்கலாம் அல்லது வானத்தில் உள்ள தெய்வங்களால் காணப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று அதை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பூனை வடிவம் தற்பொழுது அங்கு சுத்தம் செய்யப்பட்டு, புதியது போன்று மெருகேற்றப்பட்டுள்ளது. இயன்றவர்கள் நேரில் அதை அங்கு சென்று காணலாம்.