தூத்துகுடி மாவட்டம் சாத்தாங்குளத்தில் காவல் அதிகாரிகள் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரிகள் தந்தை, மகன் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைதாகியுள்ளனர். சிபிசிஐடியினர் இவ்வழக்கை கொலைவழக்காக பதிவு செய்துள்ளனர்.

சாத்தாங்குளம் காவல் நிலையத்தில் காவலர்கள் தந்தை மற்றும் மகனை, விசாரணையின் பேரால் அடித்தது முதல் அந்த இரவு முழுவதும் கெஞ்சியும் கேட்காமல் அவர்களை விடாமல் தாக்கியதையும், வழக்கறிஞரை உள்ளே விடாததையும், மருத்துவமனையில் எந்த விளக்கமும் அளிக்கப்படாததையும், அந்த நேரத்தில் பெனிக்ஸின் சகோதரி விஜயவாடாவில் இருந்த தன் நிலை பற்றியும் தெரிவித்துள்ளார், அவர்களின் ஆடைகளில் ரத்தக்கறை இருந்தது வரையில் அத்தனையையும் தெரிவித்துள்ளார்.

நல்லா உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவர்களின் சடலத்தை மட்டுமே பெற முடிந்ததாகவும், பிரார்தனை பண்ணிக் கொண்டிருந்த அம்மாவிடம், செய்தி அறிந்த சித்தப்பா எதுக்கு பிரார்தனை பண்ற, மகன் தான் போய்ட்டானே என சொன்னபோதுதான் அம்மாவுக்கு தெரிந்ததாகவும் கூறும் பெனிக்ஸின் சகோதரி, அடுத்த நாள் காலையில் அனைவரும் அம்மாவை கட்டிப் பிடித்து அழுதுகொண்டே உன் மகன் மட்டும் சாகல என சொல்லும்போதுதான் அம்மா உட்பட அனைவருக்குமே அப்பா இறந்தது தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு விஜயவாடாவில் இருந்து நான் வரும் வரை எனது குடும்பத்தினர் காத்திருந்ததாகக் கூறும் பெனிக்ஸின் சகோதரி, மேஜிஸ்திரேட்டிடம் அடுத்த நாள் காலை பொஸ்ட்மார்டம் பரிசோதனை செய்து பெற்றுக்கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தப்பு செய்திருந்தால் எச்சரித்திருக்கலாம். இந்த இழப்பு தேவையற்றது. இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தமிழக அரசு நியாயமான முறையில் செயல்படுவார்கள் என நம்புகிறோம். நீதித்துறைக்கு தெரியும் என்ன தண்டனை கொடுக்கணும் என்று., அதை சீக்கிரமா செய்யணும் என்பதுதான் எங்கள் வேண்டுதல்” என்றும் பெனிக்ஸின் சகோதரி தெரிவித்துள்ளார்.

ஜெயராஜின் வீட்டில் பெனிக்ஸால் வளர்க்கப்பட்ட நாய் மிகவும் சோகமாக இருப்பதாகவும், யாரையும் கவனிக்காமல் வாசலின் முன்னால் அமர்ந்துகொண்டு பெனிக்ஸ் இறந்த சோகத்தை பிரதிபலிப்பதாய் அமர்ந்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள இந்த இரட்டைக் கொலையின் முகாந்திரமாக காட்சிதரும் பெனிக்ஸ் வளர்த்த நாய் இந்த கோர சம்பவத்தை நினைவு கூறும்படி உள்ளதாக பெனிக்ஸின் சகோதரியின் மைத்துனர் தெரிவித்துள்ளார்.